Home About Us Urgent Appeal Suo-moto Appeal Events Media

பத்திரிகைச் செய்தி - கூடங்குளம் அணு உலைக்கு எதிராக 10 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் மீது போடப்பட்ட

பத்திரிகைச் செய்தி 

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைதியாகப் போராடிய மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் தமிழக அரசே! திரும்பப் பெறுக!

அமைதியான மக்கள் போராட்டம்

            திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும், அணு உலைக்கு எதிரான மக்களின் அமைதியான போராட்டம் 1988 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. உச்சகட்டமாக மின் உற்பத்திக்கு எரிபொருள் நிரப்பும் பணி கூடங்குளம் அணு உலையில் துவங்கவிருக்கிறது என ஒன்றிய அரசு அறிவித்ததன் விளைவாக 10.09.2011-இல் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அணு உலையை எதிர்த்து அமைதியான முறையில் முற்றுகைப் போராட்டம் நடத்தத் தொடங்கினார்கள். மக்களின் அமைதியான போராட்டத்தை ஒடுக்குவதற்கு அதில் பங்கேற்ற ஒவ்வொருவர் மீதும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டன. மொத்தம் 350 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனை எதிர்த்து திரு.சு.ப.உதயகுமார் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் தலையீடு செய்ததன் விளைவாக 2014 அக்டோபர் மாதம் 240 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. மீதம் 110 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்த ஒவ்வொரு வழக்கிலும் நூற்றுக்கணக்கானோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுக!

            இந்தப் பின்னணியில் மாண்புமிகு முதலமைச்சர் தன்னுடைய தேர்தல் வாக்குறுதியின் காரணமாக 04.09.2021 அன்று வெளியிட்டுள்ள, சிறப்பு அரசாணையின் அடிப்படையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அமைதியாகப் போராடியோர் மீது போடப்பட்ட வழக்குகளில் 26 வழக்குகளை மட்டும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த அறிவிப்பினை மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு, தமிழ்நாடு வரவேற்கின்றது.

மனித உரிமையைப் பாதுகாக்கும் நோக்கத்தில் அமைதியாகப் போராடும் உரிமை அனைவருக்கும் உண்டு என்பதனை மனித உரிமைக் காப்பாளர் பிரகடனம்-1948, பிரிவு 12 A உறுதிப்படுத்துகின்றது. நமது அரசியல் அமைப்பிலும் இது ஓர் அடிப்படை உரிமையாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

            இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் கடந்த பத்தாண்டுகளாக பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை நீதிமன்றத்தில் ஆஜராகிக் கொண்டிருக்கின்றனர். இதனால் இவர்களுடைய வாழ்வாதாரம் பாதிப்பது மட்டுமின்றி அந்நாட்களில் குடும்ப நிகழ்வுகளில் கூட கலந்து கொள்ள முடியாத அவலநிலை தொடர்கிறது. இவ்வழக்குப் போடும்போது பலர் குழந்தைகளாக இருந்தனர். அவர்கள் இப்போது இளைஞர்களாகிவிட்டனர். இவர்களில் பலருக்கு வெளிநாடு சென்று வேலை செய்ய கடவுச் சீட்டு பெற முடியாமல், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை இழக்கும் நிலை இன்றளவும் காணப்படுகிறது. இந்த வழக்குகளில் உள்ளோர் எல்லோரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதிகள் மீது நம்பிக்கை கொண்டு வாக்களித்தோர் ஆவர். எனவே தமிழக அரசு மேற்கூறப்பெற்றவற்றை கவனத்தில் கொண்டு, மீதமுள்ள 84 வழக்குகளையும் திரும்பப்பெற உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு, தமிழ்நாடு கேட்டுக் கொள்கின்றது.

அணு உலை விரிவாக்கத்தை மக்கள் கருத்துக் கேட்போடு நிறைவேற்றுக

            கூடங்குளத்தில் புதியதாக 5 ஆவது மற்றும் 6 ஆவது அணு உலைகளை தொடங்குவதற்காக ஆரம்பப் பணிகளை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. புதியதாகத் தொடங்க உள்ள அணு உலைகளை மக்களின் கருத்தைக் கேட்டு அதன் அடிப்படையில், அணு உலை தொடங்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்பதனை மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு, தமிழக அரசிடம் கோருகின்றது.

 

(ஹென்றி திபேன்)

தேசிய ஒருங்கிணைப்பாளர்

மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு இந்தியா

(இ. ஆசீர்வாதம்)

மாநில ஒருங்கிணைப்பாளர்

மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு - தமிழ்நாடு

Add Comment


CHANGE THE WORLD. CHANGE YOURS.THIS CHANGES EVERYTHING.